காமத்துப்பால்

By Admin - 28 Jul 2021 114 1

நரேன் வெள்ளிக்கிழமை காலையில் இன்டெர்வியூக்கு புறப்பட சட்டையை தேடி கொண்டிருந்தான். தேடித் தேடி காலர் கொஞ்சம் கிழிந்த வெள்ளை மங்கிய மஞ்சள் சட்டையும், கருப்பு மங்கிய கால் சட்டையும் அணிந்து கண்ணாடி முன் வந்து நின்றான். எண்ணெய் இன்றி வாடிய பரட்டை தலையை தண்ணீர் கொண்டு அலசி அந்த நார் போன்ற மயிற்றை பின் நோக்கி வாரி சீவி வழித்தான். அவனது சீப்பு சிக்கி தவித்தது. ஜிப் அறுந்து தோல் கிழிந்த செர்டிபிகேட் பைலை எடுத்துக்கொண்டு ஐந்து கால் விரல்களும் தெரியும் சாக்ஸை கிழியாமல் மாட்டிக்கொண்டு நூல் கொண்டு வர்ணம் தீட்டி தேற்றிய அந்த நூலால் ஆன சாரி தோலால் ஆன ஷூ வை அணிந்து வெளியே வர வயிறு பசியால் குறு குறு வென்றது. 

பர்ஸை எடுத்து பார்க்க நாலு பத்து ரூபாய் நோட்டும் கொஞ்சம் சில்லறை நாணயமும் இருந்தது. மதியம் யோசிக்கலாம் என்று எண்ணத்துடன் பர்ஸை கால் சட்டை பைக்குள் வைத்து தண்ணீரை வயிறு ரொம்ப குடித்து வீட்டின் கதவை லிங்க் பூட்டு கொண்டு சாத்தி கொண்டிருக்க, போன் ஒலித்தது. ஒரு கையில் கதவை பூட்டிக்கொண்டு தோள்பட்டையின் உதவி கொண்டு போனை எடுத்தான், மறுமுனையில் "டேய் நீ இன்னும் கிளம்பலியா?" என்ற டயானா  குரல் கேட்க நரேன் சிரித்துக்கொண்டே "கிளம்பிட்டேன்! கிளம்பிட்டேன்! 5 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்!" "அப்படியா சார் கொஞ்சம் அப்படியே பின்னாடி திரும்புங்க!!" என்று அவள் குரல் பின்னம் படியிலிருந்து கேட்க. நரேன் வழிந்து சிரித்துக்கொண்டே திரும்ப, கையிலிருந்த பைல் நழுவி கீழே விழுந்தது. அதை எடுக்க குனிய சட்டை பாக்கெட்டிலிருந்த பேணா விழுந்தது அதை சரி செய்து கொண்டிருக்க கால் சட்டை பையிலிருந்து பர்ஸ்ஸும் விழுந்தது. பர்ஸிலிருந்து சில்லறைகள் சிதறியது. நரேனின் நிலை கண்டு முறைத்துக்கொண்டிருந்த டயானா சிரிக்க நரேனும் சிரித்தான். 

டயானாவின் ஹோண்டா ஆக்ட்டிவாவை வேகமாக ஓட்ட நரேன் சற்று தடுமாறினாலும் அவளை தொடாத வண்ணம் பின்னாடி உட்கார்ந்து கொண்டு  வந்தான். டயானா அவனது இந்த செயலை  தனது சைடு கண்ணாடியில் ரசித்துக்கொண்டு ஓட்டினாள். நரேனோ ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். 

கிண்டியில் இருக்கும் IT பார்க்கில் நரேனை இறக்கி விட்டு "ஆல் தி பெஸ்ட் டா, இந்த வாட்டி உனக்கு கண்டிப்பா கிடைக்கும்! HR என் friend தான். அவன் பெயரு மைக்கேல் அவன் கிட்ட உன்ன பத்தி எல்லாம் சொல்லி இருக்கேன். இந்த வாட்டி உனக்கு வேலை confirm!" நரேன் முகத்தில் பரவசம் ஏதும் காட்டாமல்! பதில் ஏதும் பேசாமல் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றான். 

இன்டெர்வியூ அறையில் மைக்கேல் நரேனிடம் "நரேன் this is just a mock இன்டெர்வியூ, உங்களுக்கு ஜாப் கிடைச்சாச்சு! போகும் போது அப்பொய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிட்டு போலாம்!!" "Thank You sir" என்று நரேன் படபடத்து சொல்ல மைக்கேல் நரேனை சமாதானம் செய்து "நரேன் Don't be so formal. நீங்க என்னை மைக்கேல்ன்னே கூப்பிடலாம்!" இதற்கு பதில் ஏதும் பேசாமல் தனது ஸ்டாண்டர்டு சிரிப்பை பதிலாக வைத்தான் நரேன்.

ஒரு நிமிடம் அங்கு பலத்த மௌனம் நிலவியது. மைக்கேல் கையை பிசைந்து கொண்டு எதையோ மனதில் புழங்கிக்கொண்டு ac அறையில் வெயர்த்துக்கொண்டிருந்தான். நரேன் தனது இருக்கையில் சிரித்துக்கொண்டே நெளிகையில் ஒரு நிமிடம் ஒரு மணிநேரம் போல தோன்றியது. தைரியத்தை வர வைத்துக்கொண்டு "நான் போலாமா?" என்று நரேன் கேட்க "If you dont mind...நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்" என்று மைக்கேல் நரேனிடம் கேட்க  "என்ன ஹெல்ப்?" என்று குழம்பிப்போனான் நரேன். 

கடலின் அலை சத்தம் சற்று சீற்றமாக இருந்தது. டயானா திரையுடன் விளையாடி கொண்டிருக்க, நரேன் அவளை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். நரேனை அவள் கை காட்டி அழைக்க, அவன் வரமருத்து மண்ணை நோண்டி கொண்டிருக்க, அவள் பொய் கோபத்துடன் ஓடி வந்து இவன் அருகில் உரசிக்கொண்டு அமருகின்றாள். உரசாமல் இருக்க நரேன் சற்று தள்ளி அமர்கின்றான். இதை கவனித்த டயானா "என்ன டா ஆச்சு, இண்டெர்வியூல செலக்ட் ஆகிட்டே அப்பரும் என்ன சோகம்!" நரேன் தடுமாறிக்கொண்டே "அப்படி ஒன்னும் இல்லையே!" டயானா அவனது முகத்தை திருப்பி "ஐய உன் மூஞ்ச பார்த்தா எனக்கு தெரியாதா?" நரேன் சிரித்துக்கொண்டே "மைக்கேல் இதை உன் கிட்ட கொடுக்க சொன்னான்!" என்று ஒரு கவரை நீட்டுகிறான். 

டயானா அந்த கவரை பார்த்து "என்னது இது, இத என் உன்கிட்ட கொடுக்க சொன்னான்?" என்று கூறி கவரை பிரித்து படிக்க, அது ஒரு காதல் கடிதம் என்பது தெரிந்தது! கோபத்தில் அதை கசக்கி தூர எறிந்தாள்!! நரேன் எதுவும் பேசாமல் அவனது ஸ்டாண்டர்டு சிரிப்புடன் அமைதியாக அமர்ந்திருந்தான். அவனின் அந்த அமைதி சிரிப்பு டயானாவிற்குள் எரிமலையாய் வெடித்தது. பல்லை கடித்து அவள் கத்த, "அவன் கொடுக்க சொன்னா நீயும் வாங்கிட்டு வந்திருக்க! அசிங்கமா இல்லை உனக்கு! நீ என்ன அவனுக்கு மாமா வேலை பாக்கறியா?" நரேன் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். அவன் அமைதி இவளை மேலும் எரிச்சலடைய செய்தது, "நரேன் நான் உன்ன லவ் பண்றேன்! நான் நீயா சொல்லுவேன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்! நீ சொல்ற மாதிரி தெரியல! அதனால நானே சொல்றேன் ஐ லவ் யு நரேன்!" என்று நரேனை பார்த்து சொல்ல நரேன் அவளை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். 

கடலின் ஒலியில் மௌனம் கலந்தது. டயானா அவனது கையை தனது மார்போடு சேர்த்து அணைத்து அவனது தோளில் சாய்ந்து "உனக்கு என்ன புடிக்கலியா?" என்று கேட்டு நரேனிற்கு முத்தம் கொடுக்க அவன் மீது சாய, நரேன் அவளின் முத்தத்தை தவிர்த்து முகத்தை கடல் பக்கம் திருப்பி "எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும் டயானா! சொந்தங்கள் இருந்தும் அனாதையா இருக்குற எனக்கு இருக்குற ஒரே சொந்தம் நீ!" டயானா நரேன் தோளிலிருந்து எழுந்து அவனை பார்க்க, அவன் சிரித்துக்கொண்டே "ஆனா உன் கூட செக்ஸ்? முடியுமான்னு தெரியல! உன்ன மனசார விரும்புறேன்! நெஞ்சார காதலிக்குறேன்! ஆனா உன்ன என்னால காமத்தோடு பார்க்கமுடியல! அது ஏன்னு எனக்கு தெரியல டயானா! May be I Love you like the divine!" டயானா கோபமாக மார் தெரிய தனது துப்பட்டாவை விலக்கி "ஏன் நான் அழகா இல்லையா? இல்ல செக்ஸ்சியா இல்லையா? இல்ல நீ gay-ஆ?" நரேன் சத்தமாக சிரித்துக்கொண்டு "ஹாஹா நான் gay எல்லாம் இல்ல! எனக்கு பொண்ணுங்கள புடிக்கும் ஆனா ஏனோ! உன் கிட்ட மட்டும் அந்த பீலிங் வரலேன்னு சொல்லறேன்!!" டயானா கோபமாக "ஏன்?" என்று கத்த, நரேன் பொறுமையாக "தெரியல! மே பி எனக்கு நீ கடவுளாவோ இல்ல ஒரு நல்ல பிரென்டாவாவோ தெரியலாம்!! கடவுள் கூட செக்ஸ் வச்சுக்க முடியுமா? இல்ல பிரெண்டு கூடத்தான்!! I don't know, but I sincerely லவ் யு டயானா!" என்று சொல்லி அவளை பார்க்க,  அவள் கோபமாக எதுவும் பேசாமல் முறைத்துக்கொண்டு தனது கைப்பையை எடுத்து அதிலிருந்து ஒரு 500 ரூபாய் நோட்டை மடித்து  நரேனின் சட்டை பையில் வைத்து "மறக்காம நைட் சாப்பிடு!" என்று கோபமாக கூறி திரும்பி பார்க்காமல் எழுந்து செல்ல நரேன் தடுமாறி எழுந்து சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடுகின்றான்...கடல் அலை சத்தமாக சிரித்தது...

“ஆடைக்குள் நிர்வாணத்தை தேடுவது காமம்
நிர்வாணத்துக்குள் ஆடையை தேடுவது காதல்”

                                                                                  -கவியரசு வைரமுத்து 

இந்த கவிதைக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம்ன்னு எனக்கு தெரியல! ஆனா இந்த கவிதை தான் எனக்கு இந்த கதையை எழுத தூண்டியது!

இந்த பொய் கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

from Kalyanaraman Nagarajan at 2021-08-24 13:55:37

Nice story.. vaazhthukal.. new dimension of love Thanks Kalyanaraman Nagarajan www.nkalyan.com