28.777 வினாடிகள்

By Admin - 08 Oct 2021 980 6

எதை பற்றி எழுதுவது யாரை பற்றி எழுதுவது என யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது என் கற்பனை கதாபாத்திரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது! அது என்ன கற்பனை கதாபாத்திரம்? கற்பனைச் சிந்தனை அதில் வாழும் எனது கதாபாத்திரங்கள்! வெறும் கற்பனையே! இந்த கற்பனையில் கதாபத்திரங்களாய் வரும் பலரும் எனக்குள்லேயும் வெளியேயும் வாழும் மனிதர்களே ஆவர்! அவர்களின் வாழக்கையில் நான் குறுக்கிடாமல்  வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்! உதாரணத்திற்கு எனக்கு வேண்டப்பட்ட ஒரு பெண் அவளை நான் காதலித்துக்கொண்டு இருக்கின்றேன் என்று வைத்துக்கொள்வோம்! அவளை கற்பனையில் இன்றளவும் காதலித்துக் கொண்டு அவளுடன் கற்பனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். ஆனால் நிஜத்தில் அவள் இன்னொருவரின் மனைவி. கேவலமான சிந்தனை தான் ஆனால் அவளை நான் நிஜத்தில் கண்டு வருடங்கள் பல ஆகிவிட்டது! சொல்ல போனால் இறந்தும் போய் இருப்பாள் போலும்! யாருக்கு தெரியும். இதுவே எனது கற்பனை உலகம்! இந்த கற்பனை உலகத்தில் நான் தான் கடவுள் நான் வைத்ததே சட்டம்! இந்த உலகத்தை நான் தினந்தோறும் நீரூற்றி தேனூற்றி வளர்த்து வருகின்றேன்! இதில் நானே எனது கதாபாத்திரங்களை பிரம்மாவாக சிருஷ்டிப்பேன்! விஷ்ணுவாக அவர்களை காப்பேன்! வேண்டிய பட்சத்தில் சிவனாக அவர்களை அழிக்கவும் செய்வேன்! நானே கடவுள் நான் மட்டுமே கடவுள்!!

இவ்வாறாக கடவுளாக வாழ்ந்து வந்த என் கற்பனை உலகில் புதிதாக ஒரு கதாபாத்திரம் எனது அனுமதி இன்றி என் கற்பனை உலகில் நுழைந்தது! கடவுளாகிய என்னால் கூட அந்த கதாபாத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை!  அந்த கதாபாத்திரம் என்னுள் ஒரு மாயையாய் ஆதிக்கம் செலுத்த துடங்கியது! அவள் தன்னை மோஹினி என்று பெயர் சூடிக்கொண்டாள்! தன்னை இன்னொரு கடவுளாக பிரக்ஞை செய்து கொண்டாள். என் பேச்சை அறவே கேட்க மறுத்தாள்! என் அனுமதியின்றி என் உலகை மாற்றி அமைக்க தொடங்கினாள்! என்ன செய்வதென்று தெரியவில்லை! இருந்தும் அவளை என்னால் வெறுக்க முடியவில்லை.

கதையின் நடுவே ஒரு முக்கிய குறிப்பு : அவள் பேரழகி அவள் என்னை வசியம் செய்யும் முயற்சில் என்னை தினந்தோறும் அவள் காமக் கண்களால் என் காமத்தை தூண்ட முயற்சி செய்தாள். ஆனால் நான் சீதை தேடிய ராமனானதால் என் காமத்தீயை அடக்கி கொண்டு ராமனாக கட்டுக்கோப்புடன் இருந்தேன். அவள் ரம்பை ஊர்வசி மேனகை இவ்மூவரும் ஒருசேர சேர்ந்து மோஹினியாக பிறந்தவள் போலும் கண்கள் முதல் கால் விரல் வரை கொள்ளை அழகு. அவளை கண்டு மனசு சலனம் அடைந்தாலும் ஆசை என்னுள் தீயாய் எரிந்தாலும் காமம் என்னை அணுஅணுவாக சுட்ட போதிலும் மனம் தளராத கடவுள் நான்!! அதுவும் சீதை வேண்டி வணங்கி இன்று இந்த உலகம் கொண்டாடும் உத்தம புருஷன் ராமன் நான்! இப்படி நான் சொல்லிக்கொண்டிருக்க அவள் என்னை ஆரத் தழுவி என் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தாள்! என் கண்கள் காமத்தீயால் சொருகியது! என் சக்திகள் அவளுள் அடங்கியது! அவள் என்னை ஆட்கொண்டாள்! நான் அவளுக்கு ஆட்பணிந்தேன்! என் காமத்தை என் அனுமதியின்றி சூறையாடினாள்! நான் சிங்கத்திடம் சிக்கிய மான் போல துவண்டு போனேன்! அவளின் முத்தம் என் உயிர் மூச்சை என் ஆத்தமாவிலிருந்து வாய் வைத்து உறிஞ்சி எடுப்பது போலிருந்தது...

நிஜத்தில் : நர்ஸ் சிவலிங்கத்திற்கு வெண்டிலேட்டர் வழியாக காற்றை உள்ளே செலுத்த டாக்டர் ஐ.வி-யில் ஏதோ மருந்தை ஊசி மூலமாக ஏற்றுகின்றார். சிவலிங்கம் மூச்சிற்காக துடிதுடிக்க மானிட்டரில் நாடித்துடிப்பு மெதுவாக குறைந்து கொண்டிருந்தது. அலாரம் சத்தம் ஒலிக்க சிவலிங்கத்தின் நாடித்துடிப்பு நிற்கின்றது. டாக்டர் ஷாக் கொடுத்து சிவலிங்கத்தை உயிர்ப்பிக்க முயல்கின்றார்...

கற்பனையில் : அவள் என்னை என் கண்களுள் பார்க்க என் உயிர் அவளுக்குள் அடிமை ஆனதை உணர்ந்தேன்! அவளின் அந்த உதட்டின் ஓர புன்சிரிப்பு என்னை கலங்கடித்தது! அவளின் நறுமணம் என்னை மயக்கியது! அவள் என்னை தடவி மீண்டும் முத்தும் கொடுக்க என்னுள் பட்டாம்பூச்சி மின்னலாய் பறப்பதை உணர்ந்தேன். மீண்டும் நாங்கள் இரண்டறக்கலந்தோம்...

நிஜத்தில் : டாக்டர் நர்ஸிடம் முயற்சித்தது போதும் சூடாக ஒரு காபி தனது அறைக்கு எடுத்து வருமாறு சொன்னார். வெளியே அமர்ந்திருந்த சிவலிங்கத்தின் மகன் மொபைலில் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தான்! டாக்டர் அவனை பார்த்து சோகமாக முகம் சுழிக்க "அப்பா!! அப்பா!! அப்பா!!" என்று கதற ஆரம்பித்தான், அதுவரை கீழ் வீட்டு பங்கஜம் பற்றி போனில் மேல் வீட்டு அமலாவிடம் புறம் பேசிக்கொண்டிருந்த மகள் "ஐயோ! அப்பா போயிட்டீயே!" என்று கதற டாக்டர் முழித்தார். டாக்டர் மகனிடம் அருகில் வந்து கிசு கிசுத்தவாறு "யோவ் அவரு இன்னும் உயிரோடு தான் இருக்காரு!! செத்த பிறகு சொல்லறேன்! ஓவர் சீன் போட்டு காரியத்த கெடுத்துறாத!!"

கதை புரியாதவர்களுக்கு : சிவலிங்கம் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றார்! டாக்டர் கொடுத்த மருந்தில் உள்ள மயக்கும் தன்மை அவரின் கற்பனை திறனை மேலும் அதிகரித்து அவரை புதிய அவதாரமாக உயிர்ப்பிக்கின்றது! அதில் வரும் மோஹினி என்ற கதாபாத்திரம் சத்தியமாக எனக்கு தெரியாது அது சிவலிங்கத்திற்கு மட்டும் தெரிந்த உண்மை.... அவள் யார் என்று அவர் மீண்டும் எழுந்து வந்து சொன்னால் தான் உண்டு... இந்த கற்பனைகள் அனைத்தும் 28.777 வினாடிகளில் நடந்தவை... 

கற்பனையில் சிவராஜ் பரமேஸ்வரன் 
எழுதியது 

உண்மையிலும் சிவராஜ் பரமேஸ்வரன் 
எழுதியது தான் 

மொத்தத்தில் எழுதி கிறுக்கியது 
சிவராஜ் பரமேஸ்வரன்.

Add Your Comments

Say Something

 

Comments

from Pushpanathan at 2021-10-09 00:17:07

அழகான கிறுக்கல்கள். அடிமன ஆசைகள்


from Shakira at 2021-10-08 22:53:01

Should be more powerful


from Sudhakar Arjunan at 2021-10-08 22:52:10

Oh My god Awesome sivaraj.


from Saravana at 2021-10-08 22:52:08

Hey bro that a wonderful website


from Chandru at 2021-10-08 22:52:04

Never found such a wonderful tamil content


from Sasi Kumar at 2021-10-08 12:22:35

Nice good 👍