Barry Allen

By Admin - 13 May 2023 823 0

வழக்கம் போல் இல்லாமல் இன்று சற்று தாமதமாகவே கிளம்பினேன்!  தியாகரா கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இளவட்டங்களின் நடுவில் நான் என் வயதான வயதினை உணர்ந்தேன்! ஏதோ ஒரு இனம் புரியாத சோகம் தொற்றிக்கொண்டது! தனிமை சோகமா? அல்லது நான் என் இளம் வயதில் இவர்களை போல வாழவில்லையே என்ற பொறாமை சோகமா தெரியவில்லை! நெஞ்சில் நுழைத்த பாரம் இப்பொழுது தோல் பட்டை நோக்கி நகர்ந்தது! தோல் பையில் இருந்த கேமரா-வின் பாரம் என்னை நிதானத்திற்கு கொண்டு வந்தது! அப்பொழுது ஒலி பெருக்கியில் அடுத்த ரயிலின் வரவை சொல்ல காதில் head set-ஐ மாட்டிக்கொண்டு என்ன பாட்டு கேட்கலாம் என்று மொபைலில் தேட தொடங்கினேன். 

ஒரு நிமிடத்தில் ரயில் வந்தது, ஏறி அடுத்த கம்பார்ட்மெண்ட் வரை எட்டி பார்த்ததில் உட்கார இடம் இல்லை என்பது உறுதியாதனது. பிறகென்ன வழக்கம் போல் ஒரு காலி கதவின் ஓரமாக என்னை நிலை படுத்தி நிறுத்திக்கொண்டு பாடலை தேடி தொண்டங்கினேன். தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன் அதற்குள் புரட்சி தலைவர் Dr.M.G. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் நிலையமும் வந்து சேர்ந்தது. நான் இறங்கி மாரி ஏறும் நிலையம் அது, கடுப்பில் இறங்கினேன்! ஏன் கடுப்பானேன்? சத்தியமாக தெரியவில்லை! பாட்டு கிடைக்காத கடுப்பா? இல்லை வாழ்க்கையை நினைத்து கடுப்பா?இப்படி காரணம் தெரியாத கடுப்பான கோபத்துடன் நடந்து சென்று  கூட்டமாக இருந்த முதல் தானியங்கி படியை விட்டுவிட்டு இரண்டாம் தானியங்கி படிக்கட்டில் ஏறிக்கொண்டேன்.  ஏறியவுடன் பாட்டு கிடைத்தது "Led Zeppelin - Stairway To Heaven". பாட்டோடு படி தானே நகர நான் பூமியிலிருந்து மேலே மிதந்து வந்து கொண்டிருப்பது போல தோன்றியது. கூட்டம் அலைமோதி கொண்டிருக்க எனக்கோ இந்த பாட்டு ஒரு வித தனிமையை உணர்த்தியது. நான் நேரே சென்று 2-ஆம் நடைமேடையின் அருகில் உள்ள கல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். பாட்டின் மெட்டு என்னை கிறங்கடிக்க செய்தது ஒரு வித போதை போல என் கண்கள் மூடிக்கொண்டன அந்த இசை அமுதில் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது யாரோவர் என்னை தட்ட என் சிந்தனை ஓட்டம் தடை பட்டது எரிச்சலுடன் ஏறெடுத்து பார்த்தேன். அங்கே ஒரு இளம் வயது பெண் கருப்பு நிற முகக்கவசம் அணிந்து நின்று கொன்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். நான் குழம்பி போய் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் ஏதோ சொல்லி தலை அசைக்க நான் பதில் பேச இயலாமல் அவளின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு வித காந்த சக்தி அந்த கண்களுக்கு இருந்தது. நேரம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அவள் என் காத்திலுள்ள headset-ஐ விளக்கி "கொஞ்சம் தள்ளி உட்காரீங்களா" என்று சொல்ல நேரம் நிதானத்திற்கு வந்தது. 

மறுபடியும் headset மாட்டிக்கொண்டு அவளை திரும்பி பார்க்க கூடாது என்று என்னை வருத்திக்கொள்ள அதை செய்ய முடியாமல் நான் தவியாய் தவித்துக் கொண்டிருந்தேன். ச்சை என்ன வாழ்க்கையடா இது என்று என்னை சபித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு வேறு இடம் நகர்ந்து சென்று நின்றுகொண்டேன். ஏர்போர்ட் வரை அண்ணா நகர் வழி செல்லும் மெட்ரோ ரயில் வந்தது. கூட்டம் முண்டியடித்துக்கொண்டு ஓடி இருக்கையை பிடித்து கொண்டிருந்தது. நான் அமர செல்ல ஒருவர் என்னை தள்ளிவிட்டு இருக்கையில் அமர்கிறார், சொல்ல போனால் அமருகிறாள்! அவளே தான் அவள்! அவள் மறுபடியும் என்னை பார்க்க, அவள் கண்கள் என்னை கிறங்கடிக்கச் செய்தது! அவள் எதிரே உள்ள காலி இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன். என்னால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனை நேரம் தான் நான் தரையை மொபைலை செருப்பை பார்த்துக்கொண்டிருப்பது! என்னால் முடியவில்லை நான் அவளை பார்க்க தொடங்கினேன்! பார்த்துக்கொண்டிருந்தேன்! ரசித்துக்கொண்டிருந்தேன்! அவளும் என்னை பார்த்தாள் ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மொத்தம் 48 முறை அவள் கண்கள் என் கண்களோடு பேசாமல் பேசிக்கொண்டது. அவளின் அழகிய பட்டு போலிருந்த தலை முடி கூட அவள் என்னை பார்ப்பதை தடுக்க வில்லை! நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம்! காரணம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தோம்! அதில் என்ன ஆனந்தம் உள்ளது என்று கேட்டால் எனக்கு சொல்ல தெரியவில்லை! கடைசியாக அவள் நேரு பார்க் நிலையம் வந்த பொழுது என்னை பார்த்துக்கொண்டே இறங்கினாள்! என் பார்வை அவள் மீது இருந்தாலும் நான் என் இருக்கையிலிருந்து அசையவில்லை. ரயில் புறப்பட்டது! இனம் புரியாத சோகம் தொற்றிக்கொண்டது. கீழ்ப்பாக்கம் ரயில் நிறுத்தத்தில் இறங்கி கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடந்தேன்! அங்கே ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது அம்புலன்ஸின் பின் கதவு திறக்க "என் டா இன்னைக்கு லேட்?" "இல்ல பாலா train 9 நிமிஷம் லேட்" "டேய் எவ்வளவு ரிஸ்க் எடுத்து உன்ன வெளிய கொண்டுவரேன்னு தெரியும்ல! Dr.மைத்திரிக்கு தெரிஞ்சுது மொத்த குட்டும் வெளுத்துரும்!! சரி காசு எங்கே?" சிரித்துக்கொண்டே இரண்டு 500 ரூபாய் நோட்டை நீட்டினேன்! "யாராவது பாக்கறதுக்குள்ள சீக்கிரம் வண்டில ஏறு!!" நான் ஏறிக்கொண்டே "பாலா எனக்கு Aerosmith - Dream On பாட்டு போடுறியா?" பாலா சிரித்துக்கொண்டே "கிறுக்குக்கூ... english பாட்டு தான் கேப்பிங்களோ?" என்று கூறிக்கொண்டே ஆம்புலன்ஸ் கதவை சாத்துகின்றான்!

இப்படிக்கு, 
Barry Allen.

இந்த Barry Allen-ஐ நான் கனவில் சந்தித்த பொழுது அவர் தனக்கு நேர்ந்த மெட்ரோ ரயில் அனுபவத்தை ஒரு சிறுகதையாக எழுதி எனக்கு கொடுத்ததை அப்படியே உங்களுடன் பகிறுகிறேன்! அவர் சொன்னது போல இந்த கதையை அந்த காந்த கண்ணழகிக்கு சமர்ப்பிக்கின்றேன்! 

இந்த கதையில் வந்த காந்த கண்ணழகி உண்மையே! அவளின் முகம் எனக்கு தெரியாது! 48 முறை பார்வை பொய் எத்தனை முறை பார்த்தோம் என்ற கணக்கே தெரியாது காரணம் பார்த்துகொண்டேதான் இருந்தோம்! ஆதலால் தப்பி தவறி நேரு பார்க்கில் இறங்கிய அந்த கருப்பு முகக்கவசம் அணிந்த அந்த பதுமை இந்த கதையை படிக்க நேர்ந்தால் மறுநொடி யோசிக்க வேண்டாம் என்னை நேரடியாக facebook instagram  மூலம் தொடர்பு கொள்ளலாம். என் மனைவி நான் மேல கூறியவற்றை நம்ப மறுக்கின்றாள் நீங்கள் வந்து தயை கூர்ந்து உண்மையை உணர்த்த வேண்டும். 

பெண்ணின் பின் குறிப்புகள் : கருப்பு முகக்கவசம், இளம் பச்சை T-shirt, கருப்பு ஜீன்ஸ், கருப்பு shoe, கையில் apple watch! T-Shirt-ல Authentic என்று பெரிதாக பொறிக்கப்பட்டிருந்தது. 

இப்படிக்கு இந்த பொய்களை உண்மை போல் எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன். 

Add Your Comments

Say Something

 

Comments

No comments.