அதோனிஸின் மோதிரம்
By Admin - 07 Oct 2023 1055 0

காலங்கள் கடந்து முதல் முறையாக தனது நாற்பதாவது வயதில் தனது ஆசைகளை தீர்த்துக்கொள்ள அதோனிஸ் கடலை முதல் முறையாக தாண்டுகின்றான். அதோனிஸ் ஒரு கடல் வாழ் மெர்மென், மெர்மென் என்றால் உடலின் மேல்பாகம் மனிதர்கள் போலவும் இடுப்பின் கீழ் மீன் போல வால் கொண்டதாக இருக்கும்! இவர்களை கடல் கன்னி என்று அழைப்பது பொது வழக்கம் ஆனால் கடல் கன்னி ஒரு பெண் பால்! ஆண் பால் கடல் கன்னிகளை எப்படி தமிழில் அழைப்பது என்று தெரியவில்லை. தெரிந்தால் தயை கூர்ந்து எனக்கு தெரிவிக்கவும்.
அதோனிஸ் ஆழ் கடலில் சிமோகா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்துவருபவன். துபாஷ் 4 என்ற அரசன் அந்த சாம்ராஜ்ஜியத்தை சுமார் 467 வருடங்களாக ஆண்டுகொண்டிருந்தான். கடற்கன்னி ஹெலன் அதோனிஸ் மீது உயிராக இருந்தாள், இருக்கின்றாள். ஹெலன் அரசன் துபாஷின் 27 வது மனைவி, அல்ல 32 வது!! இல்லை 40 வது!! சத்தியமாக ஹெலன் துபாஷின் எத்தனையாவது மனைவி என்று தெரியாது ஆனால் அவள் அதோனிஸ் மீது உயிராக இருக்கின்றாள் என்று மட்டும் தெரியும். துபாஷோ தனக்கு எத்தனை மனைவிகள் இருக்கின்றனர் என்ற கணக்கு வழக்கு தெரியாமல் தினம் தினம் இவர்களை எப்படி காதலித்து சந்தோஷப்படுத்துவது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தான்.
அதோனிஸ் என்றோ கடல் மேல் நீந்தி கொண்டிருக்கும் பொழுது ஒரு படகில் ஒரு மனித பெண்ணை முதல் முறையாக அரை நிர்வாணமாய் நிற்க காண்கின்றான். அவனது கண்கள் அந்த பெண்ணின் அங்கங்களை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அவன் அப்படி எதை தான் பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்று நானும் சேர்ந்து திரும்பி பார்த்தேன்! திரும்பி பார்த்தால் அங்கே ஒரு பெண் அரைக்கால் சட்டை அணிந்து படகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்!! கூட அவளது கணவனும் கையில் குழந்தையுடன் நிற்க கண்டு அதோனிஸ் எதை கண்டு இப்படி வெறித்து பார்த்தான் என்று கேட்க தூண்டியது! அதையும் கூசாமல் அவனிடம் கேட்டுவிட்டேன்!! கேட்டதற்கு அவன் அந்த பெண்ணின் கால்களை வர்ணித்தான்! அப்பொழுது தான் மனித காமவெறியின் உச்சம் புரிந்தது! உங்களுக்கும் புரிந்திருக்கும் என்று உணருகிறேன்!
அவனது வர்ணனை என்னையே கிறங்கடிக்க செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! சரி கதைக்கு வருவோம்!
இப்படி அவன் காதல் கால்கள் மேலிருக்க, அந்த காதலை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறியுடன் கடலை இங்கும் அங்கும் சுற்றி கொண்டிருந்தான். அந்த காதலிக்கு மீண்டும் குழந்தை பிறக்கின்றது இம்முறை மீண்டும் அவள் தனது கணவனுடன் குழந்தைகளுடனும் மீண்டும் படகில் கடலுக்கு வருகின்றாள். அதோனிஸ் அவளை அவளின் கால்களை கண் கொட்டாமல் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றான். இதை முதல் முறையாக ஹெலன் கவனிக்கின்றாள். இதை பற்றி நேரே அதோனிஸிடம் கேட்கின்றாள். அதோனிஸ் என்ன பேசுவது என்று தெரியாமல் முதல் முறையாக அவனது ஆசைகளையும் காதலையும் காமத்தையும் இச்சைகளையும் ஒரு சேர சிரித்தும் அழுதும் பேசியும் கொட்டிதீர்க்கின்றான்! அதோனிஸின் பித்து பிடித்த பிதற்றலை பார்க்க இயலாமல் ஹெலன் ஒரு முடிவு எடுக்கின்றாள்.
ஹீரா தேவி ஒரு முறை ராதையின் அழகை கண்டு மதிமயங்கி யாருக்கும் தெரியாமல் தேவலோகத்திலிருந்து மறைந்து ஹெலனுடன் சிலகாலம் கடலில் சேர்ந்து வாழ்ந்தாள் அதற்கு பிரதி பலனாக மாய மோதிரம் ஒன்றை ஹீரா ஹெலனுக்கு கொடுத்தார். அந்த மோதிரம் வைத்து ஹெலன் மனிதர்கள் போலவும் தேவர்கள் போலவும் உரு மாரி தேவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் செல்ல இயலும்! இதை ஹீரா ஹெலனிற்கு கொடுத்த காரணம் ஹெலன் ஹீரா தேவியை தேடி வருவாள் என்று எண்ணி கொடுத்தாள்! ஹெலனோ அதோனிஸ் மீது மதி மயங்கி கிடந்தாள்! இன்று அதே அதோனிஸின் பரிதாப நிலை கண்டு அந்த மோதிரத்தை அவனுக்கு கொடுக்கலாம் என்று முடிவெடுக்கின்றாள்.
ஹெலன் அந்த மோதிரத்தை அதோனிஸிடம் கொடுத்த பிறகு ஒரு நிபந்தனை வைக்கின்றாள், அதோனிஸ் அந்த பூவுலக பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அதோனிஸ் எந்த தப்பான முடிவும் ஏதும் எடுக்காமல் மறு நொடி யோசிக்காமல் அவன் நேரே அவளிடம் வந்து தஞ்சம் அடைய வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை! அதோனிஸ் கணங்களில் கண்ணீரும் காதலுடன் முதல் முறையாக ஹெலனை வாரி அணைத்து முத்தம் மிட்டு அவளுடன் காதல் கொள்கின்றான்.
சீச்சீ என்ன எழவுடா இது என்று உங்களுக்கு தோன்றலாம், ஆனால் இது கடல் கன்னிகள் மெர்மென்களின் காதல் மனிதர்கள் போல கேவலமான காதல் அல்ல இது முழுவதும் உணர்வுபூர்ணமானது உடல்பூர்ணமானது கிடையாது! சரி கதையை தொடர்வோம்!!
மாய மோதிரத்தை வாங்கி கொண்டு அதோனிஸ் தன் எண்ணம் போல் அந்த படகை தேடி அலைந்தான்! எப்பொழுதும் கண்ணுக்கு தெரியும் அந்த படகு இன்று அதோனிஸின் தெரியவே இல்லை! இரவு பகலாக தேடினான்! நாட்கள் வரங்களானது! வாரங்கள் மாதங்களானது!! மாதங்கள் வருடங்களானது!! அவளையும் காணவில்லை அவளது படகையும் காணவில்லை! அதோனிஸ் சோகமானான்! கடல் கன்னிகள் சோகமானால் அவர்களின் ஆயுட்காலம் குறையும். அங்கே ஹெலனின் உடல் நிலை சீரழிய தொடங்கியிருந்தது! அதோனிஸின் நிலைமையும் சீரழிய தொடங்கியிருந்தது. அதோனிஸ் இளைப்பாற கடலின் கீழே இருந்த பவிழ பாறையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டு மெல்ல எழுந்து பார்க்க, அவன் படகில் பார்த்த அதே பெண் மூக்கின் வழியே காற்றை வெளியே விட்டுக்கொண்டு அவனை நோக்கி தேவதை போல் வந்துகொண்டிருந்தாள். அதோனிஸ் சந்தோசமாக எழுந்து நாய் வாலை ஆட்டி தனது அன்பை தெரிவிப்பது போல எழுந்து தனது மீன் வாலை ஆட்டி அவளை பார்த்து அவளை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தான். அவள் இவன் அருகில் வந்து நேரே பார்த்து சிரிக்க அதோனிஸும் அவளை பார்த்து சிரித்தான். அதோனிஸ் மெல்ல அவளின் அருகில் சென்று அவளை வாரி அணைத்து முத்தம் இடலாம் என்ற எண்ணத்தில் அவளை நெருங்க எங்கிருந்தோ ஒரு ஈட்டி வந்து அதோனிஸின் இதயத்தில் பாய்கின்றது. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் அதோனிஸ் அவளை பார்க்க அவள் இப்பொழுது மேலும் மகிழ்ச்சியில் அதோனிஸை பார்த்து அவள் சிரிக்கின்றாள்! அதோனிஸ் கையிலிருந்த மோதிரம் விலகி போக அதோனிஸ் அதை தாண்டி பிடிக்க முயற்சி செய்ய அவளது கணவன் ஒரு பெரும் வலையை அதோனிஸ் மீது வீசுகின்றான்! தட்டி தடுமாறி அந்த மோதிரம் அதோனிஸ் கையில் வந்து சேருகின்றது! சேர்ந்த மறு நொடி அதோனிஸ் ஹெலனை நினைக்கின்றான்! மறு நொடி அதோனிஸ் அந்த வலையிலிருந்து மாயமாகின்றான். என்ன நடந்தது என்று ஒன்றும் புரியாமல் அவளும் அவளது கணவனும் அதிர்ச்சியில் நீந்தி கொண்டிருக்க, அதோனிஸ் ஹெலனை தேடி அவளின் அந்தபுரத்தில் வந்து சேர்கின்றான்.
ஈட்டி பாய்ந்து பச்சை ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கும் அதோனிஸை கண்ட ஹெலன் ஓவென்று ஓலமீட்டு அவனிடம் ஓடி வந்து அவனை மடி மீது வைத்து வாரியணைத்து அழுதுகொண்டிருக்க என்றும் வராத அரசன் அன்று சமயம் பார்த்து அங்கு வருகின்றான். தன் மனைவி வேறொருவருவனுடன் இருக்க கண்டு கடுங்கோபத்தில் தனது சூலத்தை எடுத்து ஹெலன் மீது எரிய ஹெலன் அதோனிஸ் கையில் உள்ள மாய மோதிரம் கொண்டு அந்த இடத்தை விட்டு மாயமாக மறைகின்றாள். அரசனின் சூலம் யாரும் இல்லாத தரையில் சென்று பாய்ந்து செங்குத்தாக நிற்கின்றது.
நான் : ஹெலனும் அதோனிஸும் எங்கே போனாங்க? துபாஷ் என்ன பண்ணான்?
அவள் : நீ என்ன காதலிக்குறேன்னு சொல்லு அப்போ தான் மீதி கதைய சொல்லுவேன்!!
நான் : அட லூசு எனக்கு கல்யாணம் ஆகிருச்சு!! நீ இப்படி கேட்டது மட்டும் என் மனைவிக்கு தெரிஞ்சது!! உன்ன பிஷ் ப்ரை ஆகிடுவா!!
அவள் : நீ தான் டா லூசு உன் பொண்டாட்டியால கடல் கிழ எப்படி வரமுடியும்!! நாம இப்போ எங்க இருக்கோம்னு தெரியுமா? பசிபிக் ஓசான் கீழே இருக்கோம்!!
நான் : சரி நான் கிளம்புறேன்! என் பொண்டாட்டி என்ன தேடுவா!! நாளைக்கு பார்க்கலாம்...
....என்று சொல்லி முடிப்பதற்குள் திமித்ரா என்னை வாரி அணைத்து முத்தமிடுகின்றாள்... அந்த ஈர முத்தத்தோடு பூவுலகம் வந்து சேர்ந்தேன்!! ஈரத்தோடு கட்டிலில் படுத்துக்கொண்டு விட்டத்தை பார்த்து என் மனைவி எனக்காக மஹாபலிபுரத்திலிருந்து வாங்கி வந்த அந்த சங்கு மோதிரத்தை தடவிக்கொண்டிருந்தேன்...
சங்கு மோதிரத்தை தடவியவாறு,
இந்த கதையை எழுதியவன்!
இப்படிக்கு கிறுக்குத்தனமாக யோசிக்கும்,
சிவராஜ் பரமேஸ்வரன்.
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
24 Oct 2020
UNMASK
Secret Friend - A secret is no secret if it’s heard by two. So the one who knows is the one who holds. Everyone would have a one who holds to your sec...
02 Nov 2020
ATMAN
Sanatana Dharma is the nearest science to any religious order or ordeal. But why such hatred towards it? Makes me think about the notion of a superior...
21 Jun 2021
அந்த ஐந்து நாட்கள் - மூன்றாம் ...
இரண்டாம் நாள் படிக்க இங்கு click செய்யவும் அந்த குளிர் காற்றிலும் எனக்கு வேர்வை துளிகள் முத்து முத்தாக பூத்தது, கீழே அவள் வெள்ளை சுடிதாரில் சிகப்...