காதல் கடைசி அத்தியாயம்

By Admin - 11 Jun 2021 783 0


எனக்கு ஒரு கடிதமோ, லாவண்யாவிற்கு தொலைபேசி அழைப்போ வரவில்லை. இருப்பினும் நான் NUS-ற்கான முயற்சியை கைவிடவில்லை. ஒரு வருடத்தை வீணடித்தேன். +2 தேர்வை மறுபடியும் எழுதினேன். எண்ட்ரன்ஸ் கோச்சிங் சென்றேன். NUS NUS என்று பித்துபிடித்தவன் போல் அலைந்தேன். அப்பா என் முயற்சியை கண்டு துணை நின்றார். மறுமுறை எழுதிய +2 தேர்வில் 1112 வாங்கினேன். நான் இவ்வளவு மதிப்பெண் எடுத்தும் என் முகத்தில் சந்தோசத்தை காணாததால் அப்பா வருத்தப்பட்டார். அம்மா எனக்கு பைத்தியம் என நினைத்து விக்கியிடமும் லாவண்யாவிடமும் புலம்பினாள். விக்கியும் லாவண்யாவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் சேர்த்தனர். லாவண்யா CSE எடுத்தாள் விக்கி EEE எடுத்தான். வாழக்கையில் ஒரு வருடம் வேகமாக சென்றது. தேவையான எல்லா தேர்வையும் எழுதி முடித்து NUS-ன் முடிவிற்காக காத்திருந்தேன். 

6 ஜூலை 2000

NUS இடமிருந்து ஒரு கடிதம் வந்ததாக அப்பா சொன்னார், மேஜை மீதிருந்த கடிதத்தை பிரித்து படித்தேன். என் பதிலுக்காக அப்பாவும் அம்மாவும் காத்திருந்தனர். தொண்டை கனத்து "கிடைக்கவில்லை" என்று கூறி கண்களில் நீர் வழிய என் அறைக்குள் சென்று கதைவை அடைத்தேன். அப்பாவும் அம்மாவும் கதவை திறந்து உள்ளே வர, அம்மா ஆறுதலாக என்னை கட்டி அணைத்தாள். அப்பா "ஸ்காலர்ஷிப் இல்லனாலும் பரவாயில்லை காசுகொடுத்துக்கூட சேர்ந்துக்கலாம் தம்பி" என்று ஆறுதல் சொல்ல "அங்க அந்த மாதிரி எல்லாம் இல்ல பா" என்று சொல்லிக்கொண்டிருக்க வெளியே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. அப்பா யாரென்று பார்க்க வெளியே சென்றார். சென்றவர் வெளியிலிருந்து அம்மாவையும் என்னையும் கூப்பிட்டார். நாங்கள் வெளியே வந்து பார்த்தபொழுது அங்கே மார்டினாவும் கூட அவளது அப்பாவும் அம்மாவும் நின்றிருந்தனர். 

18 வயதே ஆகியிருந்தாலும் ஒருவருடம் கழித்து மார்டினாவை பார்த்த பொழுது கண்கள் சந்தோஷத்தில் மின்னியது ஆனந்த கண்ணீர் கண்களை குளமாக்கியது. நாங்கள் இருவரும் சுற்றி இருப்பவர்களை மறந்து மௌனமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நான் என்னை மறந்து அவளின் அருகில் சென்று அவளை ஆரத்தழுவிக்கொண்டேன். மார்டினாவின் தந்தை என்னை தடுக்க வர அவளது தாய் அவரை தடுத்து "வேண்டாம்" என்று கூற, அமைதியாகி சோபாவில் அமர்ந்தார். என்ன என்று புரியாமல் அப்பாவும் அம்மாவும் குழம்பிப்போனார்கள் கூடவே நானும் குழம்பி போனேன். மார்டினா "ஒரு வாக் போலாமா" என்று என்னை கேட்க, நான் திரும்பி அவளது அப்பா அம்மாவை பார்த்தேன். சரி என்று அவள் அம்மா கண்ணசைக்க நாங்கள் வெளியேறினோம். என் அம்மாவிற்கு ஒரு சின்ன கோபம் நான் அவளை கேட்க வில்லையே என்று. வெளியே சென்று திரும்ப வந்து மார்டினா, அம்மாவிடம் "ஆண்ட்டி ஒரு 5 மினிட்ஸ்ல போயிட்டு வந்துடுறோம்" என்று கெஞ்சியவாறு கேட்க அம்மாவும் ஒரு வித பெருமிதம் கொண்டு சென்று வா என்று கண்களால் பதில் கூறி வழியனுப்பினாள்.   

நாங்கள் இருவரும் என்ன பேசுவதென்றே தெரியாமல் கைகோர்த்துக்கொண்டு சாலையில் நடந்தோம். தேவாலயத்தை அடைந்தோம். நாங்கள் மட்டுமே அன்று தேவாலயத்தில் இருந்தோம். இவள் மண்டியிட்டு பிராத்திக்க நான் அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன். அவள் கண்கள் மூடி பிராத்திக்க அவளுக்கு வேண்டியவற்றை கொடுத்து விடு என்று தேவனிடம் கூறி நான் வெளியேறி படிகளில் வந்து உட்கார்ந்தேன். 

பிராத்தனை முடிந்து அவள் என்னருகில் வந்து உட்கார, நான் சிரித்துக்கொண்டு "என்ன திடீருன்னு இந்த பக்கம்? அதுவும் அப்பா அம்மாவோட?" என்று கேட்க "ஒன்னும் இல்ல உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசையா இருக்குன்னு சொன்னேன் உடனே அப்பா அம்மா சரின்னு சொல்லிட்டாங்க, அது தான் பையன பார்க்க வந்தோம்!" என்று நக்கலாய் சொன்னாள். நான் வெட்கி சிரித்துக்கொண்டு "சும்மா கலாய்க்காதே எதுக்கு வந்தீங்கன்னு சொல்லு!" "ஏன் டா நாங்கெல்லாம் உன்ன பையன்னு பார்க்க வரக்கூடாதா?" அவள் திரும்பவும் சிரித்துக்கொண்டே சொல்ல, கொஞ்சம் எரிச்சலுடன் "சும்மா கடுப்ப கிளப்பாதே! விஷயம் என்னனு சொல்லு! இல்லேன்னா நான் கிளம்புறேன் போ!" என்று பொய் கோபமாய் எழுந்து படிகளிலிருந்து கீழிறங்கினேன். வாசலில் மார்டினாவின் அப்பா அம்மாவும் தேவாலயம் நோக்கி வருவதை கண்டு மீண்டும் படி ஏறினேன். இதைக் கண்டு சிரித்துக்கொண்டிருந்தவள் திடிரென்று தலையை பிடித்து நிலை தடுமாறி கண்கள் மேல் நோக்கி சொருகி படிகளில் உருண்டு விழுந்தாள். நான் பதறி அடித்து அவளை பிடித்து எழுப்ப முயல அவள் மூக்கில் உதிரம் வழிய மயக்கம் தெளியாமல் படுத்திருந்தாள். மார்டினாவின் அம்மாவும் அப்பாவும் இதைக்கண்டு ஓடிவர நான் செய்வதறியாது முழத்திருந்தேன். அவர்களது கார் வேகமாக வர மார்டினா அதில் ஏற்றப்பட நானும் ஏறிக்கொண்டேன். கார் வேகமாக மருத்துவமனை நோக்கி சென்றது.  

விவரம் அறிந்து அப்பா அம்மா விக்கி லாவண்யா மருத்துவமனைக்கு வந்தனர். என்ன என்று புரியாமல் ஒரு ஓரமாக தனியாக நின்றிருந்தேன். அப்பாவும் விக்கியும் என் அருகே வர, அம்மாவும் லாவண்யாவும் மார்டினாவின் அம்மா அருகே சென்றனர். அப்பா என் தோள் மீது கை போட்டு கண்கள் கலங்கி என்னை பார்த்தார். ஒன்றும் புரியாமல் விக்கியை பார்த்தேன் அவன் கண்களும் கலங்கி போய் இருந்தது. மார்டினாவின் தந்தை எங்களை நோக்கி வந்தார் "Final stage-ன்னு டாக்டர் சொல்லிட்டார், can you make her last wish come true" என்று அவர் குரல் தழுதழுத்தது கேட்க அப்பா சரி என்று தலை அசைத்தார்! என்ன நடக்கின்றது என்று குழம்பி போய் நான் கேட்க. அப்பா மார்டினாவின் அப்பாவை நோக்கி "இத நீங்களே அவன் கிட்ட சொல்றதுதான் நல்லது" என்று கூற அவர் சரி என்று சம்மதித்தார்.  

மார்டினாவின் அப்பா ஆஸ்பத்திரின் இரும்பு இருக்கையில் என்னை அமர வைத்து பொறுமையாக விவரிக்க தொடங்கினார் “Its time that you know the truth, Martina is one among the patient who is affected by Glioblastoma Multiforme (GBM IV), which is a kind of tumour that grows inside the brain, as of now there is no medical cure or any surgical treatment. If we try to remove it through trial surgery, she may go brain dead and the least possibility of survival is 3% which would equally kill her. The time given to her is 3 – 6 months. The only wish she wished was to get married to you” என்று அவர் கூற புரியாமல் முழித்தேன். அவர் மீண்டும் "மார்டினாவுக்கு மூலையில கேன்சர் கட்டி இருக்கு, அத ஆபரேஷன் பண்ணி எடுக்க முடியாது அப்படியே பண்ணாலும் 3% சான்ஸ் தான் அவ உயிரோடு இருக்க வாய்ப்புன்னு டாக்டர் சொல்லிட்டாரு. இன்னும் ஒரு 3 - 6 மாசம் தான் அவ நம்ம கூட இருப்பா. அவளோட கடைசி ஆசை உன்ன கல்யாணம் பண்ணனும்ன்னு சொன்ன, அதுக்காகத்தான் உங்கள பார்க்க வந்தோம்" என்று அவர் கூறி முடிக்க  என் காதுகள் அடைத்து போனது. மூச்சு முட்டியது. பேச்சு குளறியது. தலை சுற்றியது. அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். கண்ணீர் வரவில்லை. நாவு தளர்ந்தது. எழுந்து நேரே சென்று குடத்தில் இருந்த தண்ணீரை மொண்டு குடித்து அப்பாவிடம் சென்றேன் "அப்பா அவரு எதோ சொல்லறாரே அதெல்லாம் உண்மையா" என்று குரல் தழுக்க கேட்டேன் அப்பா பதிலேதும் கூறாமல் அங்கிருந்து மௌனமாய் செல்ல. அங்கிருந்து வெறி பிடித்தவன் போல் ஓட ஆரம்பித்தேன். கண்களில் கண்ணீர் தேங்கியது. நேரே தேவலத்தின் வாசலருகே வந்து மூச்சிரைத்தேன். தேவாலயம் மூடி இருந்தது. வாசலருகே இருந்த கல்லை எடுத்து ஓங்கி தேவாலய கதவின் மீது எறிந்தேன். கோபத்தில் கத்தினேன். கொச்சைகொச்சையாக ஏசினேன். தேவாலய வாசலை ஓங்கி மிதித்தேன், தட்டினேன், கதறினேன் பாதர் ஓடி வந்தார். விக்கியும் அப்பாவும் பாதரிடம் நிலைமையை எடுத்துரைத்தனர். பாதர் என் நிலை அறிந்து "அவன் கோபம் தனிய தேவனிடம் கதறட்டும்" என்று கூறி சென்றார். கதவை அடிதடித்து கைகள் வலித்து சோர்ந்துபோனேன். விக்கி அருகில் வந்த மார்டினா என்னை பார்க்க வேண்டும் என்று டாக்டரிடம் சொன்னதாக சொன்னான்.   

ICU முன்பாக எல்லோரும் நிற்க நான் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தேன். டாக்டர் ஒருவர் வெளியே வந்து "யாரு இங்க சுப்பு?" என்று கேட்க "நான் தான் சுப்பு" என்று சொல்லி முன் சென்றேன். "சுப்பு மார்டினா உங்கள பார்க்கணும்ன்னு insist பண்ணதாலத்தான் உங்கள உள்ளே அனுப்புறேன். I want you to be careful of what you speak;  keep your emotions under control ok. நான் சொன்னது புரிஞ்சுதா?" என்று மறுபடியும் கேட்க நான் புரிஞ்சது என்று தலையை ஆட்டினேன். 

ICU-விற்குள் சென்றேன், AC-ன் குளிர் காற்று என்னை குளிரச்செய்தது. நீல நிற திரையை விளக்கி உள்ளே செல்ல மார்டினா அங்கு பல வித வயர், டியுபுகளை அணிந்து கொண்டு சோர்வாக படுத்திருந்தாள். கண்கள் கண்ணீரால் குளமாகியது. டாக்டர் அழக்கூடாது என்று சொல்லியும் ஏனோ கண்கள் கேட்கவில்லை அனுசரணையற்ற கண்கள் என்று கோபித்துக்கொண்டு சிரித்த முகத்தோடு அவளருகில் சென்றேன். ஒரு புண் சிரிப்போடு "ஹாய்" என்று வயர் மாட்டிய கையை உயர்த்தி அருகே வர சொன்னாள். அருகே சென்று ஸ்டூலில் உட்கார்ந்தேன். கண்ணுல என்ன கண்ணீர் என்று சைகையால் அவள் கேட்க, "விக்கி புது பைக் வங்கியிருக்கான் ரொம்ப பாஸ்டா ஓட்டிட்டு வந்தான் பாரு, கண்ணுல தூசி போயிடிச்சு!! அதுக்குள்ள டாக்டரும் கூப்பிட்டாரா! அப்படியே வந்துட்டேன்" என்று சொல்ல "நம்பிட்டேன்" என்று கூறி சிரித்தாள். சமாளித்துக்கொண்டு "அது சரி, நீ என்ன ஒரு சின்ன தலைவலிக்கு போய் அட்மிட்டாகிட்டே? உங்கப்பா வேற அடுத்தவாரம் கல்யாணம் பிக்ஸ் பண்ணியிருக்காரு! ஷாப்பிங் எல்லாம் பண்ணனும் நீ இப்படியே படுத்தா எப்படி" என்று சொல்லிமுடிப்பதற்குள் "I Love You" என்று அவள் சொல்ல அவள் கண்களிலிருந்து நீர் கன்னம் வழியே வழிந்தது. நான் வாய் மீது விறல் வைத்து "உஷ்ஷ்ஷ்..... ICU-ல நிறைய பேஷியன்ட்ஸ் இருகாங்க மேடம், பொறுமையா பேசுங்க" என்றேன். அதற்கு அவள் "I Love You" என்று முணுமுணுத்து சொன்னாள். நான் அவள் நெற்றியில் முத்தமிட, அன்றிரவு முழுவதும் ஒருவரை ஒருவர் முதல் முறைப்பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தோம்.

17 ஜூலை 2000

தேவாலயத்தில் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது, வெள்ளை நிற பிராக்கில் தேவதை பூமியில் நடந்துவருவது போல அவள் தந்தையுடன் நடந்து வந்தாள். அருகே வந்து "நான் எப்படி இருக்கேன்" என்று என்னை கேட்க  "என் பொண்டாட்டி மாதிரி இருக்கே" என்று பதில் கூறினேன். பாதர் பிராத்தனை செய்ய எங்கள் கல்யாணம் இனிதே முடிந்தது. பாதர் "You may kiss the bride" என்று சொல்ல நான் மார்டினாவின் அம்மா அப்பாவையும் என்னுடைய அப்பா அம்மாவையும் பார்த்தேன், அவர்கள் கண் மூடி சம்மதம் தெரிவிக்க எல்லோர் முன்னிலையில் அவளை இறுக அணைத்து முத்தமிட்டேன். எல்லோரும் கை தட்டி கரகோஷம் எழுப்பினர். கல்யாணம் முடிந்து கோட் சூட்டுடன் நானும் கல்யாண அங்கியுடன் மார்டினாவும் கூட விக்கியும் லாவண்யாவும் எங்கள் சைக்கிளை எடுத்து தேவாலயம் விட்டு "Just Married" என்ற பதாகையோடு தெருவில் சுற்றி வீடுவந்து சேர்ந்தோம். மார்டினாவை கையில் ஏந்தி கொண்டு வீடேறினேன். வீட்டில் ஒரு சின்ன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மார்டினாவின் டாக்டர், குடும்ப நண்பர்கள், எங்கள் நண்பர்கள் என அனைவரும் அங்கிருந்தனர். கேக் வெட்டிய பின் எங்களை டான்ஸ் ஆட சொல்ல, நானும் மார்டினாவும் ஒருவரை ஒருவர் அனைத்து சேர்ந்து அடிக்கொண்டிருந்தோம், "இவளை என்கிட்டேயே விட்டுறேன்" என்று மனதில் தேவனை வேண்டினேன். எப்பொழுதும் என் வேண்டுதலுக்கு தேவாலய மணியால் பதில் தரும் தேவன் அன்று பதில் தரவில்லை. இதை மார்டினா "என்ன god answer பண்ணலியா" என்று சிரித்துக்கொண்டு கேட்டு என் கையிலிருந்து சரிந்து கீழே சாய்ந்தாள். அவளின் உதிரம் அந்த வெள்ளை அங்கியை நிறம் மாற்றியது. டாக்டர் ஓடி வந்தார். ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்றோம்.
  
மார்டினாவின் அம்மா கையில் ஜெபமாலையோடு பிராத்தித்து கொண்டிருந்தார். மார்டினாவின் அப்பாவிடம் டாக்டர்கள் கைவிரிக்க கலங்கிப்போய் அங்கிருந்த இரும்பு நாற்காலியில் சரிந்தார். அப்பாவும் அம்மாவும் அவர்களை ஆசுவாசம் செய்துகொண்டிருந்தனர். விக்கி என்னருகே நின்றுகொண்டிருந்தான். டாக்டர் என்னை வந்து அழைக்க நான் ICU-வின் உள் சென்றேன். ICU - அறையில் மார்டினா வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு பெட்டில் சோர்வாக படுத்திருந்தாள். கண்கள் கலங்கி போய் அவள் அருகே நிற்க "Hey இன்னைக்கு நம்ம first night டா  நீ இப்படி அழுதா! இந்த ரூம்ல இருக்குற ஆளுங்க என்ன பத்தி என்ன நினைப்பாங்க?” என்று அவள் கேட்க நான் சிரித்துக்கொண்டு அழுதேன். "கவலைப்படாதே மேன் நான் மேலிருந்து உன்ன வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பேன்" நான் பதில் ஏதும் பேசாமல் அமைதியாய் அருகில் அமர்ந்தேன்.  "மை டியர் புருஷா, நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது நம்ம செகண்ட் anniversary-க்குள்ள ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி உஷார் பண்றே ஒகே! இது தான் உன் பொண்டாட்டியோட லாஸ்ட் விஷ்" என்று அவள் செல்லமாய் சொல்ல மௌனமாய் இருந்தேன். "எனக்கு தெரியும் டா நான் உன்ன torture பண்றேன்னு! ஆனா என்ன பண்ண எனக்கு டைம் இல்லையே!! உன்ன தனியா விட்டு போறேன்னுல அதுதான். கண்டிப்பா ஒருத்திய கண்ண்டுபிடிப்பேன்னு ப்ரோமிஸ் பண்ணு ம்ம்ம்" என்று அவள் கை நீட்ட நான் பொய்யாக "ப்ரோமிஸ்" என்று கூறி அவளது கைமீது வைத்து சத்தியம் செய்தேன். அவள் தூக்கம் வர கண் அயர்ந்தாள். நான் வெளியே சென்று வரலாம் என்று எழுந்தபோது "புருஷா எங்க போறே? இது நம்ம first night மா, இப்படி தனியாவா விட்டு போவே. இன்னைக்கு நைட் full-அ நீ என்கூடத்தான் இருக்கனும்" என்று அவள் சொல்ல மறுப்பேதும் பேசாமல் அவளை இறுக அனைத்து நெற்றியில் ஒரு முத்தமிட்டு அவளருகில் படுத்தேன். “Hope I could stay like this forever and ever” என்று அவள் சொல்ல "எல்லாம் சரியாகிடும் நாளைக்கு நாம வீட்டுக்கு போயிடுவோம்" என்று நான் சொல்ல, அவள் என்னை அணைத்தவாறு உறங்கி போனாள் நானும் அவளுடன் உறங்கினேன்.

மறுநாள் காலையில், அவள் ஐஸ் கட்டி போல் உறைந்து போயிருந்தாள். டாக்டர்கள் ஓடி வர அவளை விடாமல் இறுக பிடித்திருந்தேன். அவளும் என்னை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தாள். அவளது விரல்களிலிருந்து வலுக்கட்டாயமாக டாக்டர்கள் என்னை விடுவிக்க முயன்றனர். கத்தி கூபாடிட்டேன். அம்மாவும் அப்பாவும் என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். முயற்சி வீணானது விடாமல் கத்திக்கொண்டிருந்தேன், டாக்டர் ஒரு இன்ஜெக்ஷன் கொடுக்க மயங்கினேன். அவளது பிடியிலிருந்து மெதுவாக தளர்ந்தேன். இருந்தும் அவள் விரல் என் சட்டையில் மாட்டிக்கொண்டு இழுக்க, இதைக் கண்டு மார்டினாவின் அம்மா சோகம் தாங்காமல் கதறினாள்.    

என்னை பக்கத்து அறையில் படுக்க வைக்க, அங்கே "டேய் புருஷா விட்டா இங்கே செட்டில் ஆகிடுவே போல!" என்று என்னை எழுப்பி எனது முடியை கோதிவாறு அருகில் உட்கார்ந்து  "நான் சொன்னதை மறந்துறாதே! அடுத்த anniversary வரைதான் உனக்கு டைம்! உங்கிட்ட பை சொல்லாம போனா கோச்சிப்பேன்னு தான் உன்ன பார்க்க வந்தேன்! மத்தவங்க கிட்ட நீயே சொல்லிடு, முக்கியமா அப்பா அம்மா, விக்கி லாவண்யா, அப்பரும் அங்கிள் ஆண்ட்டி கிட்ட சொல்லிடுனா. டேக் கேர் புருஷா! நான் மேல இருந்து உன்ன பார்த்துட்டுதான் இருப்பேன்... பை பை..." என்று கூறி என் நெற்றியில் முத்தமிட்டு காற்றோடு கலந்து போனாள். 

தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தபொழுது ஹாலில் எல்லோரும் அழுது புலம்ப அவள் நிம்மதியாக ஐஸ் பெட்டிக்குள் படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள்.   

காதல் தெய்வீகமானதுதான், ஆனால் எந்த தெய்வீக காதலும் நீண்டகாலம் வாழ்ந்ததில்லை...

முற்றும்.

- சுப்பு (எ) சுப்பிரமணி 

இந்த கதையை நான் 2007-ல் எழுதினேன். நான் எழுதிய பல கதைகளில் இதுவும் ஒன்று. திரைமொழியாக இதை எடுக்க எண்ணி கனவு கண்டேன். கனவு காலம் போய காலத்திலும் வெறும் கனவாகவே இருக்கின்றது. இக்கதை என் காகித குவியலில் குப்பையாய் மக்கி அழிய வேண்டாம் என்று எண்ணி உங்களுக்கு ஒரு தொடர்கதையாக சமர்பித்தேன்.  இக்கதையை படித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த பொய்க்கதையை எழுதியது,
சிவராஜ் பரமேஸ்வரன்.


All my stories are legally registered with Screen Writers Association - SWA. For further queries mail me at contact@padmajaamedia.com 


Add Your Comments

Say Something

 

Comments

No comments.